Wednesday, 28 May 2008

ஜூனியர் விகடன் கருத்து (Open in Internet Explorer)

தில்லையை உலுக்கும் சமய பிரச்னை!

சைவமா? வைணவமா?

தேவார விவகாரத்தில் போராட்டத் தீ கிளம்பிய சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடுத்தகுபீர்! கோயிலுக் குள்ளேயே, தில்லை கோவிந்தராஜ பெருமா ளுக்கும் தனி கோயில் உள்ளது. நடராஜர் கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் கோவிந்தராஜபெருமாள் திருக்கோயில் மட்டும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கடலூர் திருவந்தி புரம் கோயில் நிர்வாக அலுவலரே இந்தக் கோயிலையும் நிர்வகித்து வருகிறார்.

இந்த ஆண்டு கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த கோயிலின் பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் ரங்காச்சாரி உள்ளிட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், பிரம்மோற்சவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் அறநிலையத்துறைக்கு மனு கொடுத்துள்ளார்கள்.

கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோற்சவத்தை எதிர்க் கும் தீட்சிதர்கள் சிலரை


சந்தித்தோம். வைத்திநாதசாமி தீட்சிதர் என்பவர் நம்மிடம், ''இது சிவ ஸ்தலம். அந்தக் காலத்தில் சிவ - வைணவ மதங்களுக்கிடையே மாச்சர் யம் இருக்கக்கூடாது என்பதால் சிவன் கோயில் வளாகத்திலேயே பெரு மாளுக்கும் தனி சன்னதி வைத்தார்கள். அவை பரிவார தெய்வங்கள் என்று அழைக்கப்படுமே தவிர, தனி கோயிலாக பார்க்கப்படாது. மற்றபடி, உற்சவங்கள் எல்லாமே சிவனுக்குத்தான். இங்கும் அப்படித்தான் நடைபெற்று வருகிறது. அதேசமயம், பெருமாளுக்கு நித்ய கால பூஜைகள் குறைவில்லாமல் நடத்தப்படுகின்றன. இதுவரை அந்த சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்தப் பட்டதாக சரித்திரம் இல்லை. இப்போது எதற்காக புதிதாக இப்படி செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி'' என்றார்.

சாமமூர்த்தி தீட்சிதர் என்பவர், ''இங்கே அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கும் சிவ-வைணவ பூஜைகளுக்கு சிலர் பங்கம் செய்யப்பார்க்கிறார்கள். நூறு வருடங்களுக்கு முன்புகூட இப்படி பிரச்னை கிளப்பினார்கள். அப்போது இங்கே வந்து ஆராய்ந்த நீதிபதி, 'இங்குள்ள பெருமாள் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றத் தேவையான வளையம்கூட இல்லை. அதனால் இங்கே கொடியேற்றும் மரபு இல்லை என்றே முடிவுக்கு வரவேண்டியுள் ளது' என்று தீர்ப்பளித்தார். அது மட்டு மில்லை... ஒரு கோயிலில் இரண்டு பிரம் மோற்சவம் நடத்தலாமா? இதுவரை காலம் காலமாக நடைபெற்றுவந்திருக்கும் சம்பிர தாயங்களை திடீரென்று மாற்றலாமா? இதைத்தான் நாங்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் சொல்லியிருக்கிறோம்'' என்றார்.

இதுபற்றி, கோவிந்தராஜ பெருமாள் கோயிலின் அறங்காவலர் டாக்டர் ரங்காச் சாரியிடம் கேட்டோம்.

''ஆழ்வாரால் பாடப்பெற்ற புனித வைணவ ஸ்தலம் இது. கோவிந்தராஜ பெருமாளுக்கு இப்போது பக்தர்கள் பிரம்மோற்சவம் நடத்தவேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காகத்தான் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். மற்ற பூஜைகளுக்கு இடையூறு வராத வண்ணம் எப்படி நடத்தலாம் என்றுதான் அறநிலையத்துறை தீட்சிதர்களிடம் கேட்டிருக்கிறது. இங்கே நடராஜர் ஆலயத்தில் அம்மன், முருகன் கோயில்கள் தனியே இருக்கின்றன. அங்கெல்லாம் கொடியேற்றப்பட்டு உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதுபோல், பெருமாளுக்கும் நடத்தலாம் என்று பக்தர்கள் விரும்புகிறார்கள். இப்போது விஷயம் அறநிலையத்துறையின் கையில் இருக்கிறது'' என்றார்.

முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரான வி.வி.சாமிநாதனும் இந்த விவகாரத்தில் பிரம்மோற்சவம் நடத்தியே ஆகவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதற்காக ஆதரவு திரட்டுவது, அறிக்கை, சட்ட உதவி என்று தீவிரமாக இருக்கிறார்'அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவத்தை தடுக்க தீட்சிதர்கள் யார்? தேவாரம் பாடும் பிரச்னையில் அரசு தலையிட்டது போல இதிலும் தலையிட்டு பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவேண்டும். அதற்காக ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டும். பக்தர்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார். .

அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் செல்வராஜ் தலைமையில் கடந்த 22-ம் தேதி கோயிலுக்கு வந்த அதிகாரிகள் குழுவினர், இரண்டு தரப்பையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர் களிடம் இதுபற்றிக் கேட்டதற்கு,

''பேச்சுவார்த்தை விவரங் களை ஆணையருக்கு அனுப்பிவிட்டோம். அவர்தான் இறுதி முடிவு எடுப்பார்'' என்றார்கள்.

- கரு.முத்து

No comments: